Thursday, 3 November 2016

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

 தெனாலி ராமன் கதைகள் - புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
(Thenali Raman Stories - Pulikku Piranthathu Poonai Aaguma)


ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு  அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள்  மலர்ந்தன. அங்கு வந்த  தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள்  பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து "என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?" என்று கேட்டான்.

அவர்களோ! "உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை  நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம்.  வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள  திருடிய ரோஜா பூக்களை பார்" என்று அவன் கைகளை காண்பிக்கச்  செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன்  மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து  தான்  அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன்  மேல் போர்த்திவிட்டான்.

இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும்  என்று கூறிவிட்டுச் சென்றார்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.

காவலர்கள் மன்னரை பார்த்து "அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினர்.

மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, "திருடிய பூக்கள் எங்கே?" என்று கேட்டார்.

காவலர்கள் மன்னரை பார்த்து, "பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது" என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, "உன் கைகளை காட்டு" என்று கூறினார்.

அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் தெனாலிமகனை பார்த்து, "நீ பறித்த பூக்கள் எங்கே?" என்று கேட்டார்

அவனோ! மன்னரைப் பார்த்து, "நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என்  தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி  செய்தார்கள்" என்று கூறினான்.

மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.

தெனாலியும்  அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

Thursday, 27 October 2016

நன்றி ஓடுகளே

 நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

 உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

சிங்கமும் நரியும்

சிங்கமும் நரியும்:

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன.


இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும்.

இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.

ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.
சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.

அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது.

நன்றி மறந்த சிங்கம்


நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.

"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.


உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும் | The Foolish Lion and the Clever Rabbit

 அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.


ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.


சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.


இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.


அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.


அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.


முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

அடைந்ததை அழித்தல்

அடைந்ததை அழித்தல்‏ | The Monkey and The Crocodile Story 

  ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.


ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது.


பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.

ஒருநாள் முதலையின் மனைவி, ‘‘அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது.

‘‘அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

அதற்கு முதலையின் மனைவி, ‘‘அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்’’ என்றது.



‘‘அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன்மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு.’’ என்றது.

அதற்கு முதலையின் மனைவியோ, ‘‘அந்த குரங்கை எனக்காக கொடுக்கவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன்’’ என்று சொல்லி கோவமாக சென்றது.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. ‘‘இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?’’ என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று.

வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது.

‘‘நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘நண்பனே, என் மனைவி ‘ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப் பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்த செயலுக்கு உனக்கு மன்னிபே கிடைத்து” என்றது

ஆகவே, ‘‘நீ கராலமுகனை நம் வீட்டுக்கு அழைத்து வா. அப்போதுதான் நீ பதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்’’ என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன்.

‘‘உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! என் மனைவி ஆவலோடு உன்னை எதிர்பார்த்து, வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறாள்.’’ என்றது முதலை.

‘‘நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில், தருவது, பெறுவது; மனம்விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா? ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்?’’ என்றது குரங்கு.

‘‘நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் இன்பமாய் வா!’’ என்றது முதலை.

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘‘நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது.



ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்து நடுங்கிப்போயிற்று. ‘‘அண்ணா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று. இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்லமுடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பைச் சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியது.

குரங்கைப் பார்த்து, ‘‘நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.



‘‘அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது முதலை.

உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, ‘‘அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, ருசி மிகுந்த நாவற்பழங்களை நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்!’’ என்றது குரங்கு.



அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘‘நண்பனே, அப்படியானால் அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.

சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று.



எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘‘நல்லகாலம்! நான் பிழைத்துக்கொண்டேன். நம்பிக்கை வைக்கத் தகாதவனிடம் நம்பிக்கை வைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே! நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழித்து விடுகிறது. என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.

குரங்கிடம் முதலை, ‘‘நண்பனே, நாவற்பழங்களை கொடு எனக்கு’’ என்றது.

குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. ‘‘சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு.

‘‘முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது.

‘‘நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.



‘‘துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்’’ என்றது குரங்கு. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. அந்த இடத்தை விட்டுச் சென்றது.

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்!