Showing posts with label நீதிக் கதைகள். Show all posts
Showing posts with label நீதிக் கதைகள். Show all posts

Thursday, 27 October 2016

நன்றி ஓடுகளே

 நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

 உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.

கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

சிங்கமும் நரியும்

சிங்கமும் நரியும்:

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன.


இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும்.

இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.

ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.
சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.

அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது.

நன்றி மறந்த சிங்கம்


நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.

"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.


உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும் | The Foolish Lion and the Clever Rabbit

 அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.


ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.


சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.


இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.


அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.


அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.


முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

அடைந்ததை அழித்தல்

அடைந்ததை அழித்தல்‏ | The Monkey and The Crocodile Story 

  ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.


ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது.


பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.

ஒருநாள் முதலையின் மனைவி, ‘‘அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது.

‘‘அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

அதற்கு முதலையின் மனைவி, ‘‘அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்’’ என்றது.



‘‘அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன்மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு.’’ என்றது.

அதற்கு முதலையின் மனைவியோ, ‘‘அந்த குரங்கை எனக்காக கொடுக்கவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன்’’ என்று சொல்லி கோவமாக சென்றது.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. ‘‘இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?’’ என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று.

வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது.

‘‘நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘நண்பனே, என் மனைவி ‘ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப் பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்த செயலுக்கு உனக்கு மன்னிபே கிடைத்து” என்றது

ஆகவே, ‘‘நீ கராலமுகனை நம் வீட்டுக்கு அழைத்து வா. அப்போதுதான் நீ பதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்’’ என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன்.

‘‘உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! என் மனைவி ஆவலோடு உன்னை எதிர்பார்த்து, வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறாள்.’’ என்றது முதலை.

‘‘நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில், தருவது, பெறுவது; மனம்விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா? ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்?’’ என்றது குரங்கு.

‘‘நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் இன்பமாய் வா!’’ என்றது முதலை.

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘‘நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது.



ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்து நடுங்கிப்போயிற்று. ‘‘அண்ணா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று. இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்லமுடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பைச் சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியது.

குரங்கைப் பார்த்து, ‘‘நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.



‘‘அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது முதலை.

உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, ‘‘அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, ருசி மிகுந்த நாவற்பழங்களை நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்!’’ என்றது குரங்கு.



அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘‘நண்பனே, அப்படியானால் அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.

சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று.



எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘‘நல்லகாலம்! நான் பிழைத்துக்கொண்டேன். நம்பிக்கை வைக்கத் தகாதவனிடம் நம்பிக்கை வைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே! நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழித்து விடுகிறது. என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.

குரங்கிடம் முதலை, ‘‘நண்பனே, நாவற்பழங்களை கொடு எனக்கு’’ என்றது.

குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. ‘‘சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு.

‘‘முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது.

‘‘நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.



‘‘துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்’’ என்றது குரங்கு. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. அந்த இடத்தை விட்டுச் சென்றது.

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்!

ஆமையும் இரண்டு வாத்துகளும்

ஆமையும் இரண்டு வாத்துகளும் | The Tortoise and the Ducks Story 

  அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.


ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.

“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.



“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.

“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து.

அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை

“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.

இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.


சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.

கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.

பேராசையால் உயிரிழந்த கொக்கு

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.

ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.


உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.



பாடம்: மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்

பஞ்சதந்திர கதைகள் - சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் 

  போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.

அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.